Monday, 19 October 2009
நம் வாழ்க்கையில் மிக முக்யமான ஒரு அங்கம் வகிக்கும் பிணைப்பு நட்பு தான் என்றால் அது மிகையாகாது. மனைவீ, மக்கள், தாய், தந்தை என பல உறவுகளுடன் வாழும் நமக்கு ஒரு குளிர் தென்றல் போல அமைவது நட்பு தான். நான் பல முறை பிரச்சினைகளில் சிக்கியபோதெல்லாம் தீர்வுக்கு நாடிய ஒரு உறவு நட்பு தான். ஒருஎதிர்பார்ப்பே இல்லாமல் நேசக்கரம் நீட்டும் நட்பு கடவுள் நமக்கு அளித்த ஒரு வரம் என்று கூட சொல்லலாம் .பள்ளிப்பருவத்தில் இருந்து வாழ்வின் கடைக்காலம் வரை துணை வருவதும் நட்பு தான். இத்தகைய நட்பை தேர்ந்து அறிவதும்,தொடர்ந்து வளர்ப்பதும் மிக அவசியம். நல்ல நட்பின் உன்னத அடையாளங்களில், ஓருவருக்கொருவர் எதிர்பார்ப்பின்றி உதவுவது, ஒருவர் சுக துக்கங்களில் அழைப்பை எதிர்பாராமல் கலந்து கொள்வது, மற்றும் ஒருவர் இடையூறுகளில் உடன் சென்று உதவுவது போன்றவை அடங்கும். தவறு செய்யும்போது சுட்டிக்காட்டி திருத்துவதும் நல்ல நட்புக்கோர் அடையாளம். அலுவலக நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் உதவுவது பெரிய விஷயம் இல்லை என்றாலும் எனக்கு வாய்த்த ஒரு நண்பரின் தன்னலமற்ற அன்பினை என்னால் மறக்க இயலாது. ஒரு சமயம் என் மகளுக்கு உதவும் பொருட்டு என் மனைவி அமெரிக்காவிற்கு ஒன்பது மாதங்கள் செல்ல நேர்ந்தது. எனக்கு தனியாக இருந்தோ, சமையல் வேலையோ செய்து பழக்கமில்லை. ஹோட்டல் சாப்பாடு ஒன்பது மாதங்களில் என் உடம்பில் தோற்றுவிக்கும் மாற்றங்களை நினைத்துக்கூட என்னால் பார்க்க முடியவில்லை. அப்போது, தனியாக வசித்து வந்த என் அலுவலக நண்பர் என் கூட இருந்து சமையல் செய்வது தவிர என்னை ஒரு சிறு குழந்தையை போல் கவனித்துக்கொண்டது [என் வயது 58 மற்றும் உயர் ரத்த அழுத்தம்] என்னால் மறக்க முடியாத ஒரு அனுபவம். ஆன்மீகத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்த அவரது தினசரி பூஜையும், நல்ல பழக்க வழக்கமும் அந்த ஒன்பது மாதங்களில் என்னுள் ஒரு புதிய மாற்றத்தையே உண்டாக்கியது. இதுதான் நட்பின் விசேஷமோ!
Labels: Trivia